Sunday Dec 08, 2024

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில், ஈரோடு

முகவரி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி,- 638301. ஈரோடு மாவட்டம். போன்: +91- 4256 – 230 192, +91- 98432 48588

இறைவன்

இறைவன்: சங்கமேஸ்வரர் இறைவி: வேதாம்பிகை

அறிமுகம்

பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் தமிழ்நாடு, (பவானி) என்னும் ஊரில், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோயிலின் முதன்மை கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான். அங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டி தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார். அப்போது அசரீரி தோன்றி,””குபேரனே! வேண்டும் வரம் கேள்,”என்றது. “”இறைவா! உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்,”என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் “தட்சிண அளகை’ என்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

நம்பிக்கைகள்

குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் உண்டு. தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தல விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாந்தி(சனி மகன்) கிரகத்தின் ரூபத்தில் சனிபகவான் தனி சன்னதியில் உள்ளார். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும். ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார். அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். அகால மரணமடைந்தவர்களுக்கு இங்கு “நாராயணபலி’ பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு “யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’. எனவே இத்தலத்திற்கு “திருநணா’ என்ற புராணப்பெயரும் உண்டு. இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. பத்மகிரி என்ற பெயர் கொண்ட இத்தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகியவை உள்ளன. வளம் சேர்க்கும் ஆடி 18 : பவானி கூடுதுறையில் எப்போது நீராடினாலும் சிறந்த பலன் உண்டு. இருந்தாலும் அமாவாசை நாட்களிலும், ஆடி 18 அன்றும் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆடி 18ம் நாளில் இக்கூடுதுறையில் சுமங்கலிப்பெண்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடவும் வேண்டி, மஞ்சள் நூல் கயிற்றை அணிந்து கொள்வர். சிறுமிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் கூட இக்கயிறை, வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பர்.பின்னர் தேங்காய், பழம், காதோலை கருகமணி ஆகியவற்றை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவர். திருமணமான புதுத்தம்பதியினர் காவிரிக்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை பத்திரப்படுத்தி இந்த நாளில் ஆற்றில் விடுவர். பரிகார தலம் : தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் பிதுர்களுக்குரிய பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிறது. தாய்க்கு தந்த தங்ககட்டில் : வேதநாயகி அம்மனுக்கு எதிரில் உள்ள சுவற்றில் மூன்று துவாரங்கள் உண்டு. அதற்கு ஒரு சுவையான பிண்ணனி உண்டு. 1802ம் ஆண்டில் பவானி கலெக்டராக இருந்த வில்லியம் கரோ என்பவர் வேதநாயகி அம்மனை தரிசிக்க விரும்பினார். ஆனால் வெளிநாட்டவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அம்மனின் சன்னதி எதிரில் உள்ள சுவற்றில் மூன்று துவாரங்கள் போட்டு, வெளியில் இருந்தபடியே அம்மனை தரிசித்து வந்தார். ஒரு நாள் அவர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, ஒரு பெண் அங்கு வந்து உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினாள். இவரும் உடனே வெளியேறினார். சிறிது நேரத்தில் அந்த வீட்டின் மாடிப்பகுதி இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது. தன் உயிரை வேதநாயகி அம்மன், தாய் போல் வந்து காப்பாற்றியதை அறிந்த, கலெக்டர் அவளுக்கு தங்கத்தால் ஆன கட்டிலை காணிக்கையாக வழங்கினார். இலந்தை பழம் நைவேத்தியம் : கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது. மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு. நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன. எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது. அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு திருநணா, பவானி கூடல், முக்கூடல், சங்கம க்ஷேத்திரம், பராசர க்ஷேத்திரம், வக்கிரபுரம், பதரிவனம், வீரபுரம், விஜயாபுரி என்ற பெயர்கள் உண்டு. பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம். சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது.இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம்.

திருவிழாக்கள்

ஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று நீராடுவது சிறப்பு, சித்ரா பவுர்ணமி, ரதசப்தமி சித்திரையில் 13 நாள் தேர்திருவிழா. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை, தை அமாவாசை, கிரகண காலங்கள்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பவானி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஈரோடு

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top