ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தேனி

முகவரி :
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,
ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் – 625512.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
சிலருக்கு குழந்தைப்பேறு கிடைத்தாலும், ஜாதகத்தில் பாலாரிஷ்ட தோஷம் இருந்தால் குழந்தைகளின் ஆயுள், உடல்நலத்திற்கு குறைவு ஏற்படலாம். இக்குறையைப் போக்கும் தலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சிலர் மதுரை சுந்தரேஸ்வரர் மீது பக்தி கொண்டிருந்தனர். அவர்கள் தவமிருந்த வனப்பகுதியான இங்கு சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டனர். அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டு மீனாட்சியம்மனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சித்தர்கள் தனக்கென வீடுவாசல் இல்லாததால் ‘ஆண்டிகள்’ என அழைக்கப்படுவர். அதனால் இப்பகுதி ‘ஆண்டிபட்டி’ எனப் பெயர் பெற்றது.
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். சூரியனும் சந்திரனும் அருகருகே இங்குள்ளதால் அமாவாசை மட்டுமில்லாமல் ஆண்டின் எல்லா நாட்களிலும் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர்.
சுவாமி, அம்மன் சன்னதிக்கு நடுவில் முருகனுக்கு சன்னதி இருப்பதால் இக்கோயில் ‘சோமஸ்கந்த தலம்’ எனப்படுகிறது. மூவரையும் வழிபட்டால் கைலாய மலையை தரிசித்த புண்ணியம் சேரும். இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் சப்த ரிஷிகள் என்னும் ஏழு முனிவர்கள் அமர்ந்து உபதேசம் கேட்கின்றனர்.
இங்குள்ள சந்தான விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட மழலை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் தீர பெற்றோர்கள் சுவாமி, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.
சிவனாண்டி சித்தரின் ஜீவசமாதி இங்குள்ளது. நோயால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசுகின்றனர். எதிரி தொல்லை தீரவும், முயற்சியில் வெற்றி கிடைக்கவும் வெள்ளி அன்று வேல் பூஜை நடக்கிறது.
திருவிழாக்கள்:
வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டிபட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை