தருவை அச்சம் தீர்த்த அய்யனார் கோவில், திருநெல்வேலி

முகவரி :
தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில்,
தருவை,
திருநெல்வேலி மாவட்டம் – 627356.
இறைவன்:
அச்சம் தீர்த்த அய்யனார்
இறைவி:
புஷ்கலை
அறிமுகம்:
சாஸ்தா கோவில்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில் மிகவும் சிறப்பானதாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தருவை மெயின் ரோடு. இங்கிருந்து 1 கிலோமீட்டர் உள்ளே சென்றால் கோவிலை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
முன்னொரு காலத்தில் தருவை கிராமம் மிகப்பெரிய காடாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட முன்னீர்பள்ளத்தினை தாண்டி, பிராஞ்சேரி வரை காடாகத்தான் இருந்தது. இந்த பகுதியில் இருந்து வயல்வெளிக்கு செல்பவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வயல்வெளிகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு விஷ பூச்சிகளால் ஆபத்து ஏற்பட்டுவிடும். இந்த வழியாக பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், பொதுமக்களிடம் வழிப்பறியும் நடைபெறும். இதனால் அனைவரும் அச்சத்துடன் சென்று வந்தனர். இந்த பிரச்சினை எல்லாம் தீர அய்யனார் முன்பு நின்று, “அய்யா எங்கள் அச்சத்தினை தீர்க்க வேண்டும்” என்று வேண்டி நின்றனர். இவர்களுக்கு சாஸ்தா வேண்டிய அருள் வழங்கினார்.
ஒரு சமயம் விவசாயி தனது விளை பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கிவிட்டு, பணத்துடன் தருவை நோக்கி வந்தார். அப்போது அவரை முகமூடி அணிந்து நான்கு திருடர்கள் வழி மறித்தனர். கத்தியை காட்டி பணத்தினை கேட்டனர். உடனே அந்த விவசாயி “அய்யனே. என் மகள் திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணமல்லவா இது. இந்த பணத்தை இவர்களிடம் கொடுத்து விட்டால், என் மகள் திருமணம் என்னவாகும்” என்று அய்யனை நோக்கி வணங்கி நின்றார்.
மறு நிமிடம் திருடர்கள் கண் பார்வை பறிபோனது. வழிப்பறி திருடர்கள் அனைவரும் கண் பார்வை தெரியாமல் கதறினர். இதையடுத்து விவசாயி அங்கிருந்து தப்பிச் சென்று, அய்யனாருக்கு நன்றி கூறினார்.
இங்குள்ள அய்யனை வழிபடத் தொடங்கியபிறகு, விஷ பூச்சிகள் தீங்கு செய்யவும், சாஸ்தா அனுமதிப்பதில்லை என்கிறார்கள். இப்படி பாமரர்கள் மற்றும் விவசாயிகளின் அச்சத்தினை தீர்க்கும் அய்யனார் என்பதால், இவரை ‘அச்சம் தீர்த்த அய்யனார்’ என்று அழைக்கிறார்கள். இவர் திருமண கோலத்தில் புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்துடன் இந்த கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
திருவிழாக்கள்:
பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு முதல் நாள் மாக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மறுநாள் அதிகாலை அபிஷேகம் அலங்காரம் நடந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அன்று முழுவதும் அன்னதானம் நடைபெறும்.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தருவை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி