Sunday Dec 08, 2024

கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம் போஸ்ட்-612 201, மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 435 – 244 9830, 244 9800

இறைவன்

இறைவன்: உமாமகேசுவரர் இறைவி: தேகசௌந்தரி

அறிமுகம்

திருநல்லம் – கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 34ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்.வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் ஷண்முகர் சன்னதியும், இடப்புறம் கணபதி சன்னதியும் உள்ளன. முன் மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. ராஜகோபுரத்தின் வலப்புறம் மூத்த விநாயகர் உள்ளார். கோயிலின் அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மண்டபத்தில் வலப்புறம் பிரம்மலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளனர். இடப்புறம் நவக்கிரக சன்னதி உள்ளது. அருகே நவக்கிரகம் பூசித்த லிங்கம் உள்ளது. மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. அடுத்து பைரவர், துர்க்கை, சூரியன் உள்ளனர். அடுத்து காணப்படும் மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் இடப்புறத்தில் விநாயகர் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, பிரம்மா விஷ்ணுவுடன் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மூன்று லிங்கங்கள், பைரவர், அக்னீஸ்வரர், சனத்குமாரலிங்கம், சம்பகாரண்யேஸ்வரர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். கருவறைக்கு மேலுள்ள விமானம் சற்றே பெரிய அளவில் அமைந்துள்ளது. தல விருட்சம்:அரசமரம், வில்வம், பிரம்ம தீர்த்தம் தீர்த்தம்:பூமி தீர்த்தம் ஆகமம்/பூஜை :காமிய ஆகமம்

புராண முக்கியத்துவம்

ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.

நம்பிக்கைகள்

சகல விதமான நோய்களும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து “வசுதரா’ என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம். படிப்பில் மந்தம் உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இங்குள் ஞானகுழம்பு தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன் உண்டு.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 97 வது தேவாரத்தலம் ஆகும். துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு. பிரமாண்டமான நடராஜர்: வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து, சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது. பிரமாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். இப்பகுதி மக்களுக்கு நடராஜர் ஆலயம் என்றால் தான் தெரிகிறது. நலம் தரும் சனிபகவான்: இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அகத்தியர் வழிபட்ட தலம். சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள். இக்கோயில் ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது. வைத்தியநாதருக்கு தனி கோயில் உள்ளது. இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் பிரமோற்சவ திருவிழா இரண்டு முறை நடக்கிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோனேரிராஜபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top