Saturday May 10, 2025

விஜயாபதி மாகாலிங்கேஸ்வரர் கோவில், திருநெல்வேலி

முகவரி :

விஜயாபதி மாகாலிங்கேஸ்வரர் கோவில்

விஜயாபதி, திருநெல்வேலி மாவட்டம் – 627104.

இறைவன்:

மகாலிங்க சுவாமி

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

ராமாயண கால சிறப்பு பெற்றதும், நவக்கிரக பரிகார தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முக்கியமான சிறப்பு சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்திரருக்கு தனியாக கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக, ராதாபுரம் சென்றால், அங்கிருந்து 10கிலோமீட்டர் தொலைவில் விஜயாபதி என்ற இந்த கடற்கரை ஊர் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் அரக்கர்களை கொன்ற காரணத்தால் ராம, லட்சுமணர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதை தீர்ப்பதற்காக யாகம் செய்ய இடம் தேடி, தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளி தேவியை பிரதிஷ்டை செய்து விட்டு, அவர்களோடு தெற்கு திசை நோக்கி விஸ்வாமித்திரர் வந்தார். அதே தில்லை வனம் விஜயாபதியிலும் இருப்பதை கண்டு, அங்குள்ள தோப்பில் காளி தேவியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார்.

அதன் பின்னர் ஹோம குண்ட விநாயகர், விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆகிய தெய்வங் களையும் பிரதிஷ்டை செய்த பின்னர் ஹோம குண்டம் வளர்த்து, யாகம் செய்து ராம, லட்சுமணர்களின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். பின்னாட்களில், விஸ்வாமித்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பற்றி அறிந்த பாண்டிய மன்னன் இங்கே கோவில் எழுப்பி அவனது மீன் சின்னத்தை இரட்டை மீன்கள் வடிவத்தில் கோவிலுக்கு உள்புற முகப்பில் அமைத்து வைத்தான். எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடம் விஜயாபதி என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு உள்ள விஸ்வாமித்ர தீர்த்த கட்டத்தில் நீராடிவிட்டு, தில்லைக்காளி கோவிலில் பொங்கல் வைத்து பூஜைகள் செய்கிறார்கள். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும் உடனடி பலன் கிடைப்பது பலருக்கும் நம்பிக்கையாக உள்ளது.


இங்குள்ள கடலில் நீராடிவிட்டு, கோவிலில் உள்ள தெய்வ மூர்த்திகளை வழிபடுவதன் மூலம் ஒருவரது குடும்பத்தில் இறந்த கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மா ஆகியவை சாந்தி அடைய வழி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இங்கு, மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் ஆகியவை நடத்தப்படுகிறது. விஸ்வாமித்திர மகரிஷி சூட்சும நிலையில் இங்கே தவம் செய்து வருவதாகவும் செய்திகள் உண்டு.

சிறப்பு அம்சங்கள்:

விஜயாபதி தலத்தில் செய்யப்படும் முக்கியமான பரிகாரம் நவ கலச பூஜை ஆகும். இந்த பூஜை முறைப்படி ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, ஸ்நான பொடி, வெட்டிவேர், சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து, வாசனாதி திரவியங்களை தூவி விட்டு, கலசங்கள் நவ கிரகங்கள் கோவிலில் உள்ள வரிசைப்படி அமைக்கப்படும். நவக்கிரக பரி காரத்துக்கு உரியவர் மேற்கண்ட கலசங்களுக்கு முன்பாக கிழக்கு பார்த்து அமர வைத்து பூஜைகள் செய்யப்படும். அதன் பின்னர் கோவில் வில்வ மரத்தடியில் அவரை அமர வைத்து ஒன்பது கலசங்களில் உள்ள தீர்த்தம் மூலம் நவ அபிஷேகம் செய்யப்படும். அதன் மூலம் சம்பந்தபட்டவரை பிடித்த தோஷங்கள் விலகி அவரது உடலும், உள்ளமும் பரிசுத்தமாவதாக ஐதீகம். அதன் பின் அகிலாண்டேஸ்வரி அன்னைக்கும், மகாலிங்க சுவாமிக்கும் அர்ச்சனை செய்யப்படும்.


நவக்கலச அபிஷேகம் முடிந்த, அதே ஈரத்துணியுடன் அருகில் உள்ள விஸ்வாமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடமான கடல் பகுதியில் தீர்த்தமாட வேண்டும். பிறகு, கடற்கரை மணல் நெற்றியில் படுமாறு இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை சிவ மந்திரத்தை சொல்லியபடி உருண்டு எழுந்து, கடலில் மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படி மூன்று முறை செய்த பின்பு, எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றப்பட்டு, அது கடலுக்குள் எறியப்படும். மேலும், அணிந்துள்ள ஆடைகளை கடலில் விட்விட்டுவிடுவது முறை. விஸ்வாமித்திரர் யாகம் செய்த ஹோமகுண்டம் இப்பொழுது கிணறாக உள்ளது. இந்த கிணற்றைத் தோண்டி, பாறைகளை மேலை நாட்டினர் ஆராய்ச்சிகள் செய்தபோது, அதன் வயது ராமர் பாலத்தின் வயதுக்கு இணையாக இருந்தது என்பது தகவலாக குறிப்பிடப்படுகிறது.

விஜயாபதி பரிகார தலமாக இருப்பதால் பித்ரு தர்ப்பணம் செய்யப்படுவதும் நடைமுறையில் உள்ளது. நவ கலச யாக பூஜை பகல் 12 மணிக்கு மேல் செய்யவேண்டும் என்று சொல்லப்படுவதோடு, பூஜை முடிந்த பின்னர் வேறு எங்குமே செல்லாமல் நேராக வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப் படுகிறது. பூஜை காரணமாக, பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை விலகுவதோடு, ஒருவரது முற்பிறவிகள் மற்றும் இப்பிறவியில் செய்த பாவ கர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் கட்டுப்படுவதாகவும் நம்பிக்கை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விஜயாபதி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கன்னியாகுமாரி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top