Wednesday Jul 24, 2024

திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்-680 664. திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம். போன்: +91- 480-281 2061

இறைவன்

இறைவன்: மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர் இறைவி: உமையம்மை

அறிமுகம்

திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில் என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது. மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. தல விருட்சம்:சரக்கொன்றை தீர்த்தம்:சிவகங்கை புராண பெயர்:திருவஞ்சிக்குளம்

புராண முக்கியத்துவம்

சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம். ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிரசேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய்மறந்து விட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர். பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன். அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது. தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை. இருவரும் கயிலையை அடைந்தனர்.

நம்பிக்கைகள்

இங்கு மாலை வேளையில் நடத்தப்படும் தம்பதி பூஜை மிகவும் சிறப்பானது. இந்த பூஜை முடிந்தவுடன் பள்ளியறை பூஜை நடக்கும். இந்த பூஜையை பார்த்தால் குழந்தைபாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள், கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியன்று இந்த பூஜையைச் செய்வது சிறப்பு. இந்த பூஜைக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கு புது வஸ்திரம் சாத்தி, வில்வ அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 266 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழாக்கள்

மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவஞ்சிக்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top