Monday Sep 16, 2024

திருப்பவளவண்ணம் பவளவண்ணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருப்பவளவண்ணம் காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91- 98423 51931.

இறைவன்

இறைவன்: பவளவண்ணன் இறைவி: பவழவல்லி (பிரவாளவல்லி)

அறிமுகம்

திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம். பச்சை வண்ணர் கோவில் பாடல் பெற்ற தலமல்ல. இங்கு வரும் பக்தர்கள் பவள வண்ணரை வழிபாடு செய்துவிட்டு பச்சை வண்ணரையும் வழிபட்டுச் செல்வதையே மரபு. அச்வினி தேவதைகள் இந்தத் தலத்தில் பெருமாளை வழிபட்டதாக நம்பிக்கை

புராண முக்கியத்துவம்

விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார். இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி சாப விமோசனம் பெற, யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மன். கணவன், மனைவி இருவரும் இணைந்து நடத்தினால்தான் யாகம் பரிபூரணம் அடையும் என்பது நியதி. ஆனால், பிரம்மாவோ அவரது மனைவி சரஸ்வதிதேவியை அழைக்காமல் தனியே யாகம் செய்தார். இதனால் மனைவியின் அதிருப்தியையும் அடைந்தார். சரஸ்வதி சில அசுரர்களை அனுப்பி யாகத்தை நிறைவேறவிடாமல் செய்தாள். இதனால் கலவரமடைந்த பிரம்மா, சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணுவும் அவ்வாறே செய்து, அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிறமேனியனாக (சிவந்த உடலுடன்) காட்சி கொடுத்தார். இதனால் சுவாமிக்கு “பவளவண்ணர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. இவருக்கு “பிரவாளவண்ணர்’ என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த ஆதிசேஷன், பவளவண்ணரின் தலைக்கு மேல் குடையாக நின்றார்.

நம்பிக்கைகள்

சக்கர தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

108 திவ்யதேசங்களில் இங்குள்ள பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கோலம்: மேற்கு நோக்கி வீற்புகோலம் ராஜகோபுரம்: ஐந்து நிலை பார்வதிதேவிக்கு இத்தலத்தில் காட்சி தந்துள்ளார். சுவாமியின் அருகில் சந்தான கோபாலகிருஷ்ணர் இருக்கிறார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர். மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபாரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீலநிறமாகவும் காட்சி தந்தாராம். அவ்வகையில் பார்த்தால் இவர் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக இருக்கிறார். சத்ய க்ஷேத்ரம்: ஒருசமயம் பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு சென்றார். விஷ்ணு அவரைக் கவனித்தும், கவனிக்காதவர் போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கருதிய மகரிஷி, அவரது மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடிவிட்டார். தவறை உணர்ந்த பிருகு, பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று அவரை வழிபட்டு விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள “சத்ய க்ஷேத்ரம்’ எனும் இத்தலத்திற்கு சென்று மகாவிஷ்ணுவை வேண்டினால் விமோசனத்திற்கு வழி கிடைக்கும் என்றார் நாரதர். அவரது ஆலோசனைப்படி இங்கு வந்த பிருகு, சக்கரத்தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை எண்ணி தவம் செய்து வணங்கினார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு குறித்த காலத்தில் விமோசனம் அளித்தார். எனவே இந்த முனிவர், கருவறையில் விஷ்ணுவை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். எண்திசை அதிபர்கள்: இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், வீடு, மனையில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வீடு, கட்டடங்கள் கட்டுவதில் தடை தாமதம் உள்ளவர்கள் இந்த சன்னதியின் கீழ் நின்று வணங்கினாலே தங்கள் குறை தீரும் என்று நம்புகிறார்கள். கோயிலுக்கு முன்பகுதியில் சக்கர தீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இத்தீர்த்தத்தின் மத்தியில்தான் சுவாமி சக்ராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கின்றனர்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top