Saturday Jul 20, 2024

திருநெல்வெணெய் சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை- 607 201,விழுப்புரம் மாவட்டம். போன் +91& 4149 & 291 786, 94862 & 82952.

இறைவன்

இறைவன்: சொர்ணகடேஸ்வரர் இறைவி: ஸ்ரீ நீலமலர்கண்ணி

அறிமுகம்

சொர்ணகடேஸ்வரர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் ரிஷிவந்தியம்-நெமிலி சாலையில், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் எறையூர் நிறுத்தத்தில் இருந்து 5.6 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ள ஏ. குமாரமங்கலத்திற்கு வடக்கில் 7 கிமீ தொலைவிலும், உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திலிருந்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவிலும் நெய்வணை உள்ளது. இத்தலத்தின் மூலவர் சொர்ணகடேஸ்வரர், தாயார் நீலமலர்க்கண்ணி என்றும் பிரஹன்நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் புன்னை மரமாகும்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் இப்பகுதி வயல்கள் நிறைந்து, விவசாயத்தில் சிறந்த இடமாக இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் செழிப்பாக குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். வசதியான வாழ்க்கையால் மக்கள் இறை வழிபாட்டை முழுமையாக மறந்தனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் வருணனிடம் சொல்லி இவ்விடத்தில் மட்டும் இடைவிடாது தொடர் மழையை பெய்யும்படி கூறினார். அதன்படி வருணனும் இங்கு மழை பொழிவித்தான். முதலில் மழையைக் கண்டு மகிழ்ந்த மக்கள் தொடர்ந்து நிற்காமல் பெய்யவே கலக்கம் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து மழை பெய்ததால் ஊரில் இருந்த அனைத்து குளம், ஏரிகளும் நிரம்பி வழிந்தது. அப்போது ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து தண்ணீர் வெள்ளமாக ஊருக்குள் பாய்ந்தது. அதுவரையில் இறை வழிபாட்டை மறந்திருந்த மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். மனம் இரங்கிய சிவன், ஒரு வாலிபர் வடிவில் வந்தார். ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருந்த நெல் மூட்டைகளை தரும்படி கூறினார். அவர்களும் எடுத்து கொள்ளும்படி சொல்லவே, அவர் நெல்மூடைகளை தூக்கி வந்து ஏரியில் அணையாக கட்டி வெள்ளத்தை தடுத்தார். பின் அவர் வருணபகவானிடம் மழையை நிறுத்தும்படி சொல்லவே, அவரும் மழையை நிறுத்தினார். மழையினால் தங்கள் உடமைகள், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற மக்கள், உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் வாலிபனிடம், நீ தான் எங்கள் தெய்வம் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். அவர்களிடம், “உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே காரணம். எனவே, எந்த சூழ்நிலையிலும் அவனை மட்டும் மறந்து விடாதீர்கள் !’ என்று சொல்லி, அனைவருக்கும் சொர்ணம் (தங்கம்) நிரம்பிய குடங்களை கொடுத்துவிட்டு, “இழந்ததை இதன் மூலம் மீட்டுக் கொள்ளுங்கள்!’ என்று சொல்லி மறைந்து விட்டார். மக்கள் புரியாமல் தவிக்கவே அந்த வாலிபர் அவர்களுக்கு தன் சுயரூபம் காட்டி சுயம்புவாக எழுந்தருளினார். பின் மக்கள் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினர். சொர்ணம் தந்தவர் என்பதால், “சொர்ணகடேஸ்வரர்’ என்று பெயர்பெற்றார். இவருக்கு “நெல்வெண்ணெய்நாதர்’ என்ற பெயரும் உண்டு.

நம்பிக்கைகள்

சொர்ணகடேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால் செய்த பாவங்கள் நீங்கி ஞானம் கிடைக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார். இந்த பந்தலில் பிரம்மாண்டமாக 7500 மணிகள் இருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர். இங்கு சூலத்தின் மத்தியில் சிவன் நின்றகோலத்தில் உற்சவராக இருக்கிறார். சிவமும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இந்த வடிவம் உணர்த்துகிறது. அதிகார நந்தி இரண்டு கால்களையும், இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த நந்தி, பக்தர்களுக்காக சிவனிடம் வேண்டிக்கொள்வதாக சொல்கிறார்கள். சிவனே வந்து நெல்லை அணையாக கட்டிய தலம் என்பதால் இவ்வூர் “நெல் அணை’ எனப்பட்டு காலப்போக்கில் “நெய்வணை’ என்று மருவியுள்ளது. அம்பாள் நீலமலர்க்கண்ணி சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறாள். இச்சன்னதிக்கு எதிரே தீர்த்தக்கிணறு இருக்கிறது. கோயில் முன்மண்டபத்தில் மகாவிஷ்ணு, தன் இடது மடியில் கைகளை கூப்பி வணங்கிய கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியை அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கண்களை மூடி தியானத்தில் இருப்பது போல காட்சியளிக்கின்றனர். நடராஜருக்கு தனிச்சன்னதி உள்ளது. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். நவக்கிரகங்கள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும் இருக்கின்றனர். இங்குள்ள பைரவருக்கு ஒவ்வொரு அமாவாசையிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நடன கோலத்தில் சம்பந்தர் திருத்தல யாத்திரை வந்த திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகே வந்தபோது இருட்டி விட்டதாம். எனவே, அவர் வழி தெரியாமல் தடுமாறி ஓரிடத்தில் நின்றார். அப்போது, சிவன் அம்பாளை அனுப்பி, “சம்பந்தனுக்கு வழிகாட்டி இங்கு வரச்சொல்!’ என்று சொல்லி அனுப்பினார். அம்பாளும் சம்பந்தருக்கு எதிரே சென்று தன்னுடன் வரும்படி கூறினாள். (அம்பாள் சம்பந்தரின் எதிர்நின்று அழைத்த தலம் அருகில் “எதலவாடி’ என்று பெயரில் இருக்கிறது). அவளுடன் இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி இருட்டிலும் தனக்கு அற்புத தரிசனம் தந்த மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டே பதிகங்கள் பாடினாராம். எனவே, இங்குள்ள திருஞானசம்பந்தர் நடனம் ஆடிய கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார். இவர் ஒரு திருவாசியின் மத்தியில் தன் இரு கால்களையும் வளைத்து ஒன்றாக இணைத்துக் கொண்டு, வலது கையில் ஒரு விரலை மட்டும் காட்டியடி, இடக்கையை நளினமாக வளைத்து வித்தியாசமான அமைப்பில் இருக்கிறார். இவருடன் அப்பர், சுந்தரர் ஆகியோர் வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர்.

திருவிழாக்கள்

சிவனுக்கு உகந்த மற்றும் உரிய நாட்களான சிவராத்திரி அன்று ஊர் பொதுமக்கள் திரண்டு இத்தலத்தில் விழா எழுப்பி கொண்டாடுகின்றனர். மேலும், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடும் இங்கு பிரசிதிபெற்றதாகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உளுந்தூர்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top