Wednesday Jul 24, 2024

சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்-610 203. பொன்னிரை, திருவாரூர் மாவட்டம். போன் +91- 94427 67565.

இறைவன்

இறைவன்: பொன்வைத்தநாதர், இறைவி: அகிலாந்தேஸ்வரி

அறிமுகம்

சித்தாய்மூர் சுவர்ணஸ்தாபனேசுரர் கோயில் (திருச்சிற்றேமம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 106ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிரம்மரிசி, சித்தர்கள் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த அற்புதம் நிகழ்ந்த தலம்.

புராண முக்கியத்துவம்

இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சில நாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள் கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்கு பூமாலை தொடுத்து கொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒரு பொன் காசை கோயில் வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் “பொன்வைத்த நாதர்’ எனப்பட்டார். சில மாதங்களில் இவள் கர்ப்பமாக இருப்பது வெளிஉலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம் ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனே தஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமே இல்லை. தன்னை காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள். உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்கு பிரசவம் பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர் திரும்பினான். ஊர் மக்கள் அவரிடம் உன் மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள். அதற்கு கணவன்,””நீ உண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவு தானே திறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜை தானாக நடக்க வேண்டும். நந்திக்கு பின்னால் இருக்கும் பலி பீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர வேண்டும்,”என நிபந்தனை விதித்தான். இதைக்கேட்ட அப்பெண் இறைவனை மனமுருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது. பலிபீடம் நந்திக்கு முன்னால் அமைந்தது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர்ந்தது. அர்த்தஜாம பூஜையும் அர்ச்சகர் இல்லாமல் தானே நடந்தது. இறைவனின் திருவருளால் அனைத்தும் நடந்ததை அறிந்த மக்கள், அப்பெண்ணை வாழ்த்தினர். நந்தி கோயிலுக்கு வெளியே இருப்பதையும் நந்திக்கு முன் பலிபீடம் இருப்பதையும் இன்றும் காணலாம்.

நம்பிக்கைகள்

சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். கோயிலுக்கு பக்கத்தில் திருமால் கோயில் (ரெங்கநாதர் சிதிலமடைந்துள்ளது.)முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி என்பவர், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. எனவே இவர் தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதை காணலாம். இந்த தேன் கூட்டிற்கு நாள் தோறும் பூஜை நடக்கிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 169 வது தேவாரத்தலம் ஆகும். சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். (செட்டிப்பெண்ணின் வேண்டுதலுக்கிணங்க அம்மனின் அருளால் இன்று வரை இப்பகுதி பெண்களுக்கும், இங்கு வழிபாடு செய்பவர்களுக்கும் சுகப்பிரசவமே நடக்கிறது என கூறுகின்றனர்). செட்டிப்பெண்ணின் வறுமையை நீக்க இறைவன் பொற்காசு அளித்த தலமாதலால் செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் முக்கிய திருவிழா. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சித்தாய்மூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top