Sunday Jul 21, 2024

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்- 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 98944 43108

இறைவன்

இறைவன்: ஓணகாந்தேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன்

அறிமுகம்

ஓணகாந்தன்தளி – ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான். இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன்,பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் பாடட்டுமே என தாமதம் செய்து, பின்னர் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி மறைந்தார். அம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார்.

நம்பிக்கைகள்

பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

தமிழகத்தின் ஆன்மிகநகரான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களுள் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். “இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235 வது தேவாரத்தலம் ஆகும். இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.சுந்தரர் இந்த தலத்தில் அருளிய பக்திப் பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது. இதைப் பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று பிரதான சன்னதிகளில் உள்ளது. ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் ஆகியோர் இவர்கள். இது காணக்கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில் சுந்தரரும், இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. இங்குள்ள வயிறுதாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர். இதுதவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் “ஓம்’ என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top