Tuesday Oct 08, 2024

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், பென்னலூர்

முகவரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், பென்னலூர், காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு- 602 105

இறைவன்

இறைவன்: அகத்தீஸ்வரர்

அறிமுகம்

சென்னை – காஞ்சிபுரம் சாலையில் சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊருக்குச் சற்று முன்னதாக மின்சார அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கிழக்கே 1 கி.மீ தொலைவில் பென்னலூர் என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரின் துவக்கத்தில் அமைந்துள்ள ஏரியின் அருகே அகத்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். சுற்றுச்சுவர் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளது. மேலும் திருச்சுற்றில் உள்ள பரிவார ஆலயங்களான சுப்ரமணியர் சன்னிதி, அம்மன் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை முழுமையும் கற்கள் கீழே விழுந்து முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. சன்னிதிகளில் தெய்வ மூர்த்தங்களான சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. இக்கோயிலின் தெற்குப்பக்கத்தில் அமைந்துள்ள நுழைவுவாயில் 15-16ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நுழைவு வாயிலின் கற்களும் கீழே விழுந்து, அதன்மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்தளத்தின்மீது வேப்பமரம், ஒதியமரம், ஆலமரம் போன்றவை (30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மரங்களாக உள்ளன) வளர்ந்து கோயில் கருவறை, சுவர் ஆகியவை மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மரங்களின் வேர்கள் கற்களுக்கு இடையில் ஊடுருவியிருப்பதால் சுவரில் உள்ள கற்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றி முட்செடிகள் வளர்ந்துள்ளன.

புராண முக்கியத்துவம்

கிழக்கு நோக்கிய திருக்கோயில். நுழைவுவாயிலில் பலிபீடம், நந்தியெம்பெருமான் ஆகியவை வழிபாட்டில் உள்ளன. பலிபீடத்திற்கு முன்பாக சதுரவடிவிலான ஒரே கல்லால் ஆன கற்தொட்டி உள்ளது. இதன் விளிம்பில் “ஸ்வஸ்திஸ்ரீ திருவெண்காட்டு நங்கை” என்ற 12-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்து அமைதியுடன் கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது. இக்கல்தொட்டியை “திருவெண்காட்டு நங்கை” என்ற பெண் செய்தளித்திருக்க வேண்டும். நந்திக்குப் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகளை ஊர்மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நந்திக்கு எதிரே கருவறை முன்மண்டபச் சுவரில் இறைவனைத் தரிசிக்க வசதியாகச் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது. கருவறைக்கு மேலே விமான அமைப்பு இல்லை. செங்கல்-சுதையால் ஆன விமானம் இருந்திருக்க வேண்டும். செவ்வக வடிவில் கருவறை அமைந்துள்ளது. சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. இவற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றில்கூடத் தெய்வத் திருமேனிகள் இல்லை. கருவறை பாதபந்த அதிட்டான அமைப்புடன் விளங்குகிறது.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பென்னலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top