Saturday May 10, 2025

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் திருக்கோவில், விருதுநகர்

முகவரி :

நல்லதங்காள் திருக்கோவில்

அர்ச்சுனாபுரம்,

விருதுநகர் மாவட்டம் – 626312.

அறிமுகம்:

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு கிராமத்தின் அருகே உள்ளது, அர்ச்சுனாபுரம். நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த ஊரில் பச்சை பசுமை வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, நல்லதங்காள் திருக்கோவில். அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொழிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும்.

திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அர்ச்சுனாபுரம் சிற்றூர். திருவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வத்திராயிருப்பு. இந்த ஊரின் அருகில் உள்ளது அர்ச்சுனாபுரம்.

புராண முக்கியத்துவம் :

அர்ச்சுனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் இளம் வயதிலேயே தாய், தந்தையை இழந்தனர். சிறிது காலத்தில் நல்லநம்பி ஆட்சிக்கு வந்தான். தாய்-தந்தையை இழந்தனர். சிறிது காலத்தில் நல்லநம்பி ஆட்சிக்கு வந்தான். தாய்-தந்தையை இழந்த போதிலும் நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து வந்தான்.

தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையை ஆண்டு வந்தவர், காசிராஜா. இவருக்கு தன் தங்கை நல்லதங்காளை மிகுந்த சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்தார், நல்லதம்பி. திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் வறுமையில் வாடினர், பலரும் மாண்டனர். நல்லதங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது.

அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்று பசியை போக்கினாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள். அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாட காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்லதங்காள் அங்கு சென்றாள். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.

மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள். “எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிகிவிட்டேனே… இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?” என்று பலவாறு யோசித்தாள். அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது… ஏதாவது வாங்கிக் கொடும்மா…’ என்று அழ ஆரம்பித்தன. அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.

குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் வித்த அவளுக்கு, அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள். பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்ட பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடித்தான். அவன் மனைவியை கொன்று விட்டு பின்பு அந்த கவலையில் அவனும் இறந்து போனான். அண்ணன் – தங்கை பாசத்தைக் கண்டு மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர்.

தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்லதம்பியையும் உயிர்ப்பித்தனர். அப்போது நல்லதங்காளும், நல்லதம்பியும், “நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே நாங்கள் இறந்ததாகக் கருதி அருள்புரிய வேண்டும்” என கூறினார்கள். சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக நல்லதங்காள் தெய்வ ஜோதியில் ஐக்கியமாகி தெய்வமாகிவிட்டாள்.

நம்பிக்கைகள்:

மழைக்காலத்தில் மட்டுமே நீர்வரத்துள்ள அர்ச்சுனா நதியின் கரையில் உள்ளது நல்லதங்காளின் கிணறு. இந்த கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும். தரித்திர நிலை உள்ளவர்கள், பணம் கையில் தங்காதவர்கள், இத்தல அன்னையிடம் முறையிட்டு, 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, தனியே இன்னொரு சன்னிதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இந்த கிணற்றில்தான் என்று சொல்கிறார்கள்.

.

https://www.dailythanthi.com/devotional/aalaya-varalaru/vathirairuppu-arjunapuram-nallathangal-temple-1154508

திருவிழாக்கள்:

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்ளாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அர்ச்சுனாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஸ்ரீவில்லிப்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top